தென்காசி, ஜூன் 01 –
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பாலியல் வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள், பாலியல் கொலை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க தமிழக அரசு குற்றவாளிகளின் ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவரும் மாநில செயலாளருமான டாக்டர் இரா.ஜெஸ்லின் தலைமையில், மாவட்ட பொருளாளர் டாக்டர் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டாக்டர்.செந்தில் சேகர், மாவட்டச் செயலாளர் டாக்டர் முகமது இப்ராகிம், துணைத் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி, இணைச் செயலாளர்கள் டாக்டர் திருமலை குமார், டாக்டர் கார்த்திக் அறிவுடை நம்பி மற்றும் மருத்துவர்கள் தேவி கற்பூரநாயகி, சங்கரி, செல்வ பாலா, நிர்மல், ராஜேஷ், பாலகணேஷ், உமா மகேஸ்வரி, அபிநயா, முகேஷ், நசீம் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பெண்களும் பெண் குழந்தைகளும் நமது நாட்டின் பொக்கிஷங்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் வன்கொடுமை கொலைகள் ஆகியவற்றை தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு அரசுக்கு பின்வரும் வேண்டுகோளை வைக்கிறது.
பாலியல் கொடும் குற்றச் செயல்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகளை உடல் கூராய்வு செய்யும் மருத்துவர்கள் சொல்லல்லா துயரம் அடைகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, இதனை முழுவதுமாக நிறுத்த அரசு கடுமையான சட்டங்கள் ஏற்றுவது இக்காலத்திற்கு மிகவும் தேவையானதாக உள்ளது என அனைத்து அரசு மருத்துவர்களும் கருதுகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்போடு சேர்த்து, அவர்களின் ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக நீக்குவது குறித்து சட்டம் இயற்ற இச்சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முடிவில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவரும் மாநில செயலாளருமான டாக்டர் இரா.ஜெஸ்லின் அனைவருக்கும் நன்றி கூறினார்.



