நாகர்கோவில், ஜுன் 1 –
ஈத்தாமொழி அருகே உள்ள மங்காவிளையை சேர்ந்தவர் செல்வகுமார் (42). தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருக்கு முதலில் இசக்கியம்மாள் (35) என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர் அவரின் தங்கை நந்தினி (30) என்பவரையும் செல்வகுமார் 2ம் திருமணம் செய்து கொண்டார். தற்போது ராதாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரையும் 3ம் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு இசக்கியம்மாள், நந்தினி எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவ தினம் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரண்டு மனைவிகளையும் செல்வகுமார் சரமாரியாக தாக்கி உள்ளார். பின்னர் மாவாட்டும் கல்லை எடுத்து 2வது மனைவி நந்தினி மீது வீசியதில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் மருத்துவ சிகிச்சை செல்லவிடாமல் தடுத்து வீட்டில் அடைத்து வைத்துள்ளார். போலீசில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நந்தினிக்கு காலில் ஏற்பட்ட காயம் அதிகரித்து வேதனையில் துடித்தார். இதை அடுத்து இசக்கியம்மாள் கணவருக்கு தெரியாமல் நந்தினியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு நடந்த சம்பவத்தை கூறியதில், ஈத்தாமொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.


