திருவட்டாறு, மே 26 –
திருவட்டாறு அருகே பணம் பெற்றுக் கொண்டு பேசியபடி சொத்தை எழுதிக் கொடுக்காத கேரளாவை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மணி (60).
கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வடகோடு தாரிக்கரை தெற்கு பகுதியை சேர்ந்தவர் சாரதா குமாரி (62). இவரது கணவர் மணியன் (72). இவர்களுக்கு சொந்தமான 54 சென்ட் நிலம் ஆற்றூர் கிராமத்தில் உள்ளது. இவற்றை விற்பனை செய்ய நில புரோக்கர்களிடம் கூறியிருந்தனர். தற்போது மணியன் குடும்பத்தார் ஆறு பேரும் கேரளாவில் நிரந்தரமாக வசித்து வருவதால் மேற்படி சொத்துக்களை தங்களால் பராமரிக்க இயலாது என்றும் மொத்தமுள்ள 54 சென்ட் சொத்தில் 7 சென்ட் நீக்கி 47 சென்ட் சொத்துக்களை சேர்த்து வாங்கினால் மட்டுமே விலைக்கு கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து சொத்துக்களை அளந்து சென்று 1-க்கு ரூ.3,50,000/- என பேசி 47 சென்றுக்கு ரூபாய் 1,64,50,000/- என பேசி முடிவு செய்து அதன் படி கடந்த ஜூன் 16 ம் தேதி முன்பணமாக ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு ரூ. 200 முத்திரைத் தாள்களில் ஒரு விலை கரார் பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளனர். இதையடுத்து மணி சொத்திற்கான மீதி தொகையை அளித்து கிரயப்பத்திரம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வரும்போது மேற்படி சொத்தில் சாரதாகுமாரியும், மணியனும் சேர்ந்து ஒரு ஷெட் அமைத்துள்ளனர். அதனைபார்த்து மணி கேட்ட போது அவர்கள் சொத்தை பத்திரப் பதிவு செய்வதற்கு முன்பு அப்புறப்படுத்தி கொள்வதாக கூறினர்.
இந்நிலையில் மேற்கண்ட சொத்துக்கள் அனைத்தும் விலை பேசிய படி மொத்தம் ரூ. 1 கோடியே 54 லட்சம் வருவதாகவும் அதில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் முன்பணம் பெற்று கொண்டதாகவும், இனி மீதி தொகை: 43,50,000/- தர வேண்டும் எனவும் கூறியதை அடுத்து வங்கிக்கணக்கின் படி மீதி தொகையை அளித்துள்ளனர்.
ஆனால் மொத்தமாக உள்ள 47 சென்ட் நிலத்தில் 19 சென்ட் சொத்து மட்டுமே கிரயம் செய்யப்பட்ட நிலையில் மீதியுள்ள 28 செண்ட் நிலத்துக்கான பணம் முழுமையாக பெற்ற பின்னரும், மேற்கூறிய சொத்தை சாரதாகுமாரி தரப்பினர் எழுதிக்கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், சொத்தை பதிவு செய்து கேட்டால் இனி சொத்து ஒன்றும் தரமுடியாது. சொத்தை எழுதிக்கேட்டால் கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டுவதாகவும் மணி திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் சொத்தை எழுதி தராமல் ஏற்கனவே எழுதி தந்த சொத்திற்கு மேல் அதிகமாக ரூ. 43,50,000/- த்தை ஏமாற்றி பெற்றுக் கொண்டு வேண்டுமென்றே காலம் கடத்தி நம்பிக்கை மோசடி செய்து வருவதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
இது குறித்து திருவட்டார் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் சாரதாகுமாரி, மணியன் மகள்கள் சுமி, சிஜூ மருமகன்கள் வினோத், ஷஜின் ஆகிய 6 பேர் மீதும் பி.என்.எஸ் 316(2), 318(2), 351(2), 49 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


