தென்தாமரைகுளம், மே 25 –
தென்தாமரைகுளம் அருகே உள்ள தேரிவிளையை சேர்ந்தவர் மணிகண்ட ராஜன் (37). இவருக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி மனைவி ஜெயந்தியுடன் வசித்து வந்துள்ளார். மணிகண்ட ராஜன் லோடு ஆட்டோ (குட்டி யானை) ஓட்டி பிழைப்பை நடத்தி வந்துள்ளார். இவர் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியதாகவும் மேலும் லோடு ஆட்டோவும் (குட்டி யானை) வங்கி கடனில் வாங்கியுள்ளார். இதனால் மணிகண்டராஜன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதைப் பார்த்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மணிகண்ட ராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி தென்தாமரை குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


