நாகர்கோவில், மே 25 –
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்ட செயல்முறை விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி (பொ) மேயர் மேரி பிரின்சி லதா தலைமையில் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு குப்பைகள் கையாளப்பட்டது. அதன்பின் மக்கும் குப்பை, மக்கா குப்பை, அபாயகரமான குப்பை என 3 ஆக பிரிக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன்படி மக்கும் குப்பை, மக்கா குப்பை, அபாயகரமான குப்பை, சுகாதார கழிவு குப்பை என நான்காக பிரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையிலும், தெருக்கள், வடிகால்களிலும் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் வகையிலும், தூய்மை திருவிழா என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி (பொ) மேயர் மேரி பிரின்சி லதா, தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பொதுமக்கள் வழங்க வேண்டும். தெருக்களில் குப்பைகளை கொட்டாதீர்கள். மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் உதவ வேண்டும். மருந்து பொருட்கள், எலக்டரிக்பொருட்கள், பேட்டரிகள் போன்றவற்றை தனி கவரில் கொடுங்கள். மாநகரை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை, பொறுப்பும் ஆகும். மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கும் பணியில் அனைவரும் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் குப்பை இல்லா, தூய்மையான, நலமான நாகர்கோவில் மாநகரை உருவாக்க பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது கிருஷ்ணன்கோவில் நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் தொடங்கி வடசேரி கனகமூலம் சந்தையில் நிறைவடைந்தது. பேரணியின் போது குப்பைகளை தரம் பிரித்து வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி ஆணையர், மாநகர நல அலுவலர், மாநகர பொறியாளர், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



