பரமக்குடி, நவ. 1 –
ராமநாதபுரம் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் சிறப்பு குழு திடீர் ஆய்வு நடத்தினர். விதை ஆய்வு துணை இயக்குநர் திருநெல்வேலி சுஜாதாபாய் மற்றும் இராமநாதபுரம் சிவகங்கை விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா தலைமையில் விதை ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு குழு இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தியது.
ஆய்வின்போது விதை விற்பனை நிலையங்கள் அரசு உரிமம் பெற்றுள்ளனவா, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதை பைகளில் உள்ள அட்டைகளில் பயிர் சாகுபடி செய்யப்படும் பருவம், ரகம் குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை சரியாக உள்ளதா எனவும், விற்பனை செய்யப்படும் உண்மை நிலை ரகங்களுக்கான விதைகளுக்கு தமிழ்நாடு விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறையால் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ், வெளி மாநிலங்களிலிருந்து வரும் சான்று மற்றும் ஆதார நிலை விதைகளுக்கு படிவம் II, விதை குவியல்களுக்கான முளைப்புத்திறன் அறிக்கை உள்ளதா என்றும், விதை இருப்பு மற்றும் விலை விவரத்துடன் கூடிய விவர பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் விலை பட்டியல் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை பட்டியல்களில் ரகம். குவியல் எண். காலாவதி நாள், விவசாயி பெயர், ஊர் மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
மேற்கண்ட நடைமுறைகளை முறையாக பராமரிக்காத விதை விற்பனை நிலையங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பத்தேழாயிரத்து இருநூற்று முப்பது மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1967, விதை (கட்டுப்பாட்டு) விதிகள் 1983 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 ஆகியவற்றை கடைப்பிடிப்பதில் தவறுகள் மற்றும் விடுதல் காணப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது



