நாகர்கோவில், மே 19 –
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து பொதுமக்களுக்கு எப்போதும் சுவையான மற்றும் தரமான உணவு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று காலை முதல் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் முதலில் வடசேரி பஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்கு சென்றார். அங்கு சமையல் கூடம் மற்றும் உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைகளை பார்வையிட்டு உணவின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்தார். உணவு வைக்கப்பட்டு இருந்த இடத்திலேயே அவரே சாப்பிட்டு பார்த்து சுவை மற்றும் தரத்தை உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா தனது ஆய்வை தொடர்ந்தார். அங்கு நோயாளிகளுக்கு துணையாக வந்திருந்த பொதுமக்களும், ஏழை எளியவரும் உணவருதி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர் உணவகத்தின் தற்போதைய சில குறைபாடுகளை ஆணையாளரிடம் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
பொதுமக்களின் புகார்களை பொறுமையுடன் கேட்ட ஆணையாளர் அந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தும்படி அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நாகர்கோவில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜாதேவி, மாநகராட்சி பொறியாளர் ரகுராம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.



