தென்காசி, ஜூலை 27 –
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் 17 வார்டுகளை கொண்ட பகுதியாகும் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 1-ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் செல்லம்மாள் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான வேலை பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேலை பணிகளுக்கு ஏலம் விடாமல் ஆணையாளரும், மேலாளரும் ஒப்பந்தகாரர்களிடம் பேரம் பேசி காலம் தாழ்த்தி வருவதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியதற்கு உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணையாளரும், மேலாளரும் மிரட்டுவதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த உறுப்பினர்கள் சிலர் மாவட்ட வருவாய் அலுவலர் வீராச்சாமியிடம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் மற்றும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தணிக்கை செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஜனதா, இசக்கியம்மாள், மணிகண்டன் ஆகியோர் புகார் மனு வழங்கினர்.
தாங்கள் வழங்கிய மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் உறுப்பினர்களும், மக்களும் இணைந்து கடையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.



