அரியலூர், ஜூன்:11
அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலியே ஆதார் கார்டுக்கான பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் முகாமினை துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலியே ஆதார் பதிவு மற்றும் புகைப்படம் எடுத்தல் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்றையதினம் அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், அரியலூர் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஆதார் எடுக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது பயோமெட்ரிக் சாதனங்களை சரியான முறையில் பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் எனவும், மாணாக்கர்களின் விவரங்களை ஆதார் இணையதளத்தில் உள்ளீடு செய்யும் போது பிழைகள் ஏதுமின்றி சரியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் இம்முகாமில் 5 வயதிற்குட்பட்ட மாணாக்கர்களுக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட உள்ளது. 5 வயது முதல் 7 வயது வரை கட்டாய பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் ஆதார் பதிவு மேற்கொண்ட 15 வயது முதல் 17 வயதுடைய மாணவர்களுக்கு மீண்டும் நிலையான பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 7 வயதுக்கு மேற்பட்ட 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் பதிவுகள் இம்முகாமில் செய்யப்படவுள்ளது.
ஆதார் பதிவின்போது முகம், கைரேகைகள், கருவிழி ஆகியவற்றை பதிவு செய்வதுடன் பிறந்த தேதி, பெயர், முகவரி, அலைப்பேசி எண் உள்ளிட்ட திருத்தங்களை எவ்வித கட்டணமின்றி அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மேற்கொள்ளலாம். எனவே இந்த ஆதார் முகாமினை ஆதார் எண் புதுப்பித்தல் அல்லது ஆதார் புதியதாக எடுத்து கொள்வதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதனைத்தொடர்ந்து, பள்ளிகள் திறக்கும் நாளான இன்றையதினம் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 88,849 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் வரைப்பட நூல்களினை போக்குவரத்துத் துறை அமைச்சர் வழங்கினார். அதன்படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 2,64,911 மாணாக்கர்களுக்கு பாடப்புத்தங்களும், 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் 3,56,485 மாணாக்கர்களுக்கு பாடக்குறிப்பேடுகளும், 6-ஆம் வகுப்பு பயிலும் 7,010 மாணாக்கர்களுக்கு வரைபடநூல்கள் மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) சி.சுவாமி முத்தழகன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் மற்றும் எல்காட் நிறுவன பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



