சுசீந்திரம், ஏப். 6 –
தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான தாணுமாலயசுவாமி கோவிலில் வருடம் தோறும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு தெப்பத் திருவிழா வருகின்ற ஏப்ரல் 27ம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இன்று காலை கோவிலில் முன்பு கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வருகின்ற 16ம் தேதி தெப்பத்திருவிழாவை சிறந்த முறையில் நடத்தித் தர ஊர் பெரியவர்களை அழைக்கும் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் நிகழ்ச்சி நிரல் வெற்றிலை பாக்கு மஞ்சள் ஆகியவை வழங்கப்பட்டு அவர்களை திருவிழாவிற்கு அழைக்கும் நிகழ்ச்சி ஆகும். தொடர்ந்து 18 ஆம் தேதி காலை கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து காலை மாலை வேளைகளில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து வாகனப்பவனியும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும். வருகின்ற 26ம் தேதி காலை 8.30 மணி அளவில் விநாயக தேர், அம்மன் தேர், சப்பரதேர் ஆகிய தேர்களை அலங்காரம் செய்து பக்தர்கள் தேரை வடம் தொட்டு இழுக்கும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27ஆம் தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி அம்பாள் பெருமாள் ஆகியோரை அமரச் செய்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வரும் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில்களில் இணை ஆணையர் ஜான்சிராணி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலைய சுவாமி கோவில் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



