நாகர்கோவில், ஏப். 6 –
ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் குமரி மாவட்டத்திலிருந்து ஈரானில் மீன் பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களை பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ ஏற்பாட்டின் பேரில் சிறப்பு குழுவினர் டெல்லி சென்று வெளியுறவு துறை அமைச்சகத்திடம் மனு அளித்தனர். அதிமுக மக்களவை குழு உறுப்பினர் தம்பி துரையும் இது தொடர்பாக மாநிலங்களவையில் வலியுறுத்தி பேசியிருந்தார்.
தொடர்ந்து ஒன்றிய அரசின் நடவடிக்கையின் பேரில் மொத்தம் 345 இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் முதற்கட்டமாக குமரி மாவட்டத்தை சேர்ந்த 175 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
அவர்கள் நேற்று காலை பஸ்ஸில் நாகர்கோவில் வந்தனர். அவர்களை குமரி எல்லையில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ராஜன், அக்ஷயா கண்ணன், சந்துரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



