கன்னியாகுமரி, ஜன. 26 –
குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் 150 அடி உயர தேசிய கொடி கம்பத்தில் தேசிய தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடியை ஏற்றினார்.
மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானாவில் ரூ.75 லட்சம் செலவில் நிறுவப்பட்ட 150 அடி உயர பிரமாண்ட தேசியக்கொடி ஜூன் மாதம் 2022-ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தின் மிக உயரமான கொடிக்கம்பங்களில் ஒன்றான இதில், 48 அடி நீளம் மற்றும் 32 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.
இதனை முன்னாள் அதிமுக ராஜ்யசபா எம்.பி., விஜயகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைத்தார். விஜயகுமார் தற்போது பா.ஜ.க., உறுப்பினராக உள்ளார்.
தேசிய கொடியை தொடர்ந்து பராமரிக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்காமல் இருந்த காரணத்தால் பராமரிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
தேசிய கொடி ஏற்றாமல் இருந்த நிலையில், தொடர்ந்து தேசிய கொடியை ஏற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தேசிய கொடி பராமரிப்பை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்த நிலையில் நீதிமன்ற உத்தரவை பெற்று விஜயகுமார் தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்ற ஏற்பாடு செய்துள்ளார்.
பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று கன்னியாகுமரியில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இது மிக உயரமான கொடிக்கம்பம் என்பதாலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதாலும் தேசியக்கொடி பறக்கும் போது சேதம் அடைய வாய்ப்பு அதிகம் இருப்பதால் பராமரிப்பு பணிகள் அதிகமாக வாய்ப்புள்ளது.
இருப்பினும் அதனை ஏற்று தேசிய கொடியை பறக்கவிட ஆர்வம் காட்டும் முன்னாள் எம்பி.,க்கு நயினார் நாகேந்திரன் பாராட்டுக்களையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.



