தருமபுரி, ஜூலை 02 –
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கணபதி ஊராட்சியில் உள்ள காட்டுகொட்டாய் கிராமத்தில் விபி கிராம்ஜி திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்வோத்தமன், நீலமேகம் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினர். இத்திட்டம் 1-7-2026 முதல் அமலுக்கு வந்து செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்க்கும் ஆண்டுக்கு 125 நாட்கள் சட்டபூர்வ வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வேலை செய்ததற்கான ஊதியம் குறிப்பிட்ட காலத்திற்க்குள் வழங்கப்டாவிட்டால் அதற்கான தாமத ஊதிய இழப்பீடும் சட்டப்படி வழங்கப்படும். மேலும் வேலையின்மை உதவித் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம் இடை தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது வெறும் வேலை வாய்ப்பாக மட்டுமின்றி நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த வாழ்வாதார சொத்துக்களை உருவாக்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்ப பெண்கள், பழங்குடியினர், மாற்று திறனாளிகள், வயது முதிர்ந்தோர், திருநங்கைகள் என சமுதாயத்தில் பின்தங்கியுள்ள அனைத்து தரப்பினருக்கும் பயன் உள்ளதாகவும், நீர் பாதுகாப்பு பணிகள், அடிப்படை ஊரக கட்டமைப்பு பணிகள் ஊரக வாழ்வாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகள் என மொத்தம் 318 வகையான பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் முருகன் பஞ்சாயத்து செயலாளர் முனிவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



