நாகர்கோவில், ஜனவரி 21 –
நாகர்கோவில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 18 நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் மூன்றாமாண்டு பயிலும் மாணவ, மாணவியர்கள் ஏறத்தாழ ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 244 மாணவ, மாணவியர்கள் நேரடியாக சில நிறுவனங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணையினையும் பெற்றனர்.
இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நாகர்கோவில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுசீலாபாய் மற்றும் குமரி மாவட்ட திறன் பயிற்சி இணை இயக்குநர் லஷ்மி காந்தன், மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலர் ராஜிகா, அரசு நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தர ராமலிங்கம், குமரி மாவட்ட நிரல் மேலாளர் தினேஷ், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நான் முதல்வன் திட்ட அலுவலர் ம. ஜெர்மானுஸ் அலெக்ஸ், கல்லூரி வேலைவாய்ப்பு திட்ட அலுவலர்கள் பெட்சி தங்க ஷோபா மற்றும் விஜிலா ஜாஸ்மின் பிளவர் ஆகியோர் துவங்கி வைத்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



