சிவகங்கை, ஜன. 17 –
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற உலக அளவில் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இம்மஞ்சுவிரட்டு விழாவில், அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து 350 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், 80 மருத்துவக் குழுக்களும், காவல் துறையைச் சார்ந்த சுமார் 387 காவலர்களும் இம்மஞ்சுவிரட்டு விழா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவினை முன்னிட்டு, முன்னதாக மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில், மாடுபிடி வீரர்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், சிறாவயல் மஞ்சுவிரட்டு குழுத்தலைவர் வேலுச்சாமி அம்பலம், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



