கன்னியாகுமரி,பிப்.26-
கன்னியாகுமரி ரத வீதியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கன்னியம்பலம் என்ற கல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உள் பகுதியில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கன்னியம்பலம் 4 பக்கமும் திறந்த வெளியாக காணப்படும். இதனால் பகவதி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் கன்னியம்பலத்துக்கு சென்று இளைப்பாறி வந்தனர்.
காலப்போக்கில் வியாபார நோக்கில் கன்னியம்பலத்தை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. இதனால் கன்னியம்பலத்தின் 3 பக்கங்களும் அடைக்கப்பட்டு அதனை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. இதனால்
பக்தர்களுக்கு பயன்பட்டு வந்த கன்னியம்பலம் மூடப்பட்டது.
இந்த நிலையில் பழமை வாய்ந்த கன்னியம்பலம், மண்டபத்தை பாதுகாக்க வேண்டியும் புராதனமான இந்த மண்டபத்தை வியாபார ஸ்தலமாக மாற்றக்கூடாது என்றும் இந்த மண்டபத்தில் இருக்கின்ற அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடை களை இடித்து அகற்ற வேண்டும் என்று உத்தர விட்டார். மண்டபத்தில் உள்ள 12 கடைகளையும் அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள 12 கடைகளையும் அகற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது.
இதனைத்தொடர்ந்து வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரி, கன்னியாகுமரியில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 3 நாட்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றம் 48 மணி நேரத்திற்குள் கடைகளை அகற்ற கெடு விதித்தனர்.
அதன் அடிப்படையில் இன்று பிற்பகல் கோவில் நிர்வாகத்தினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி எந்திரம் மூலம் அதிகாலை முதலே காவல் துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் வந்தடைந்து ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடப்பட்ட கடைகளை இயந்திரங்களின் உதவியுடன் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குக்கு தீர்வு கிடைத்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடை உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைதியான முறையில் இடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



