ஈரோடு, ஜன. 6 –
பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் விழிப்புணர்வு மாநாடு விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தலைமையில் ஈரோடு வில்லரசம்பட்டியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருந்தோம். அப்போது 11 வது இடத்தில் இருந்து தற்போது பிரதமர் மோடியின் நடவடிக்கையினால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். 2047 ம் ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் முதலிடத்திற்கு வந்து விடும். சிறுகுறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி அரசின் கனவாக உள்ளது.
கிசான் சம்மன் நிதி கடந்த 2025 ஆம் ஆண்டு 6000 கோடி விடுவிக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள பெண்கள் பணம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் அந்த பணம் எங்கே சென்றது. 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதியை யாரும் இனிமேல் ஏமாற்ற முடியாது கிராமத்தின் வளர்ச்சி இனி சென்னையில் இருந்து வராது. கிராம சபையில் முடிவு செய்யப்படும். திமுக ஆட்சியில் ஒரு அணை கூட கட்டப்படவில்லை.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க திமுக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. சிறியவர்கள் கூட போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதை தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். மக்களின் நன்மைக்காக திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஈரோடு செம்மம்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேரில் சென்றார். அப்போது அவர் மஞ்சள் விவசாயிகளுடன் கோரிக்கைகளை கேட்டு இருந்தார். மாநாட்டை ஒட்டி இரண்டு நாட்கள் கண்காட்சி நடந்தது. இதில் விவசாய விளைபொருட்களின் பாரம்பரிய உணவு கண்காட்சியை மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் செந்தில், சி சரஸ்வதி எம் எல் ஏ, அதிமுக மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மாநாட்டை ஒட்டி வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு வள்ளி கும்மி நடனம் ஆடினார்.



