நாகர்கோவில், டிசம்பர் 31 –
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பிரஸ் கிளப் 22-வது ஆண்டு விழா, 2026 ஆம் ஆண்டு டைரி வெளியீட்டு விழா, கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா 28-12-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரல்வாய்மொழி பைபாஸ் சாலையில் உள்ள கார்னிவல் சிட்டியில் வைத்து நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை வகித்தார், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னணி வகித்தார். ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜாய் ராஜா மற்றும் தினமுரசு நாளிதழின் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் பிரஸ் கிளப் செயலாளர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். தலைவர் மதன் செயற்குழு உறுப்பினர் தாகூர், உறுப்பினர் சுவாமி நாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு நீதிபதி பாராட்டு
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிதிபதி விக்டோரியா கவுரி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: “ஒரு காரியம் சொல்லப்பட வேண்டும் என்றால் ஆணிடம் சொல்லுங்கள், ஒரு காரியம் செய்யப்பட வேண்டும் என்றால் பெண்ணிடம் சொல்லுங்கள்” என்று மார்கரெட் தாட்சர் கூற்றுக்கு பொருத்தமானவராகவும் படித்தவர்கள் அதிகமாக உள்ள குமரி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் அச்சமற்ற கூர்மை உடையவரே ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்க முடியும் என்பதற்கு இணங்க குமரி மாவட்டத்தில் குற்றங்கள் மிக மிக குறைந்துள்ளது என அனைத்து தரப்பினரும் உறுதிபட சொல்கின்ற வகையில் குமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் ஆகியோர்க்கு பாராட்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சியானது.
குமரி மாவட்டத்தில் சுகாதாரம் நன்றாக முன்னேறியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவது இல்லை என்ற நிலை இப்போது இல்லை. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பொறுப்பேற்ற பிறகு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேவைகள் மிக சிறப்பாக உள்ளது. குமரி மாவட்டத்தில் ஒரு பெண் ஆட்சியராக செயல்பட்டு வரும் போது மக்கள் இரு கை கூப்பி வரவேற்பார்கள்.
பள்ளிகளில் போக்சோ விழிப்புணர்வு
காவல் துறையால் நிமிர் திட்டம் என்ற ஒரு திட்டத்தில் பள்ளிக்கு வராத குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் அவர்கள் கல்வி உறுதி செய்யப்படுகிறது. அரசு பள்ளிகளில் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்; உயர் நீதிமன்ற வழக்குகளை கையாளும் போது 14,13 வயது பெண் குழந்தைகள் கையில் கைக்குழந்தையுடன் வருகின்றனர். அங்கு குற்றவாளியாக கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றவர்கள் 21 வயது பூர்த்தியடையாத ஆண்கள். தாங்கள் செய்கின்ற குற்றம் என்னவென்றும் அதன் விளைவு தெரியாமல் இந்த
குழந்தைகளின் வாழ்க்கை சிக்கலாகிறது. இங்கு நிமிர் திட்டத்தில் இதனை சேர்த்துக் கொள்ள முடியுமா என்று ஆலோசிக்க வேண்டும் என பேசினார். குமரி மாவட்டத்தை விட மாற்ற மாவட்டங்களில் ஏராளமான குழந்தைகள் கைக்குழந்தைகளுடன் நீதிமன்றத்திற்கு வந்து அதிர்ச்சிக்குள் ஆக்குகிறார்கள். பெற்றோர்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சமரசத்திற்கு வருகிறார்கள். குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் இருக்கும் போது இரண்டு குழந்தைகளை எப்படி திருமணம் செய்து வைக்க உத்தரவு பிறப்பிக்க முடியும் ரொம்ப சிக்கலான பிரச்சினையாக உள்ளது. அரசு முடிவு செய்து மாநில அளவில் ஒரு விழிப்புணர்வு இயக்கமாக வர வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என அவர் பேசினார்.
கலெக்டர் அழகுமீனா
கலெக்டர் அழகுமீனா பேசுகையில்: குமரி மாவட்டத்தில் எந்த நிகழ்வுகள் நடந்தாலும் எஸ்.பி. பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். குமரி மாவட்டத்தில் அரசு அலுவலராக பணியாற்றுவது மிகவும் கடினம்.
இங்குள்ள மக்கள் மிகவும் படித்தவர்கள் விழிப்போடு உள்ளார்கள். சென்னை தலைமைச் செயலகத்தில் எந்த மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர்களுக்கு மரியாதை இருக்கிறதோ இல்லையோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கலெக்டராக இருந்துள்ளார் என்றால் அவர்கள் சரியாக இருந்தால் தான் அங்கு கலெக்டராக இருக்க முடியும். ஒவ்வொரு நாளும் மாவட்ட மக்களுக்கு அரசின் திட்டங்களை மிகுந்த அளவு செய்து சேர்ப்பது மட்டுமே எங்களின் நோக்கம் என்று பேசினார்.
எஸ்.பி.ஸ்டாலின்
ஸ்டாலின் பேசுகையில் ஜனநயாகத்தில் மிக முக்கிய தூண்கள் காவல் துறை, பத்திரிகை துறை; இரண்டு துறைகளின் நோக்கமும் ஒன்றுதான். தகவல்கள் வர வர உண்மைத்தன்மையை பகுந்தாய்ந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகைகள்; நாங்கள் மெதுவாக மெத்தனமாக இருக்கும் போது நீங்கள் தட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான செய்திகள் உண்மை செய்தியாக இருந்தாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியிட வேண்டும் இவ்வாறு பேசினார்.



