திருவெண்ணெய்நல்லூர், டிசம்பர் 31 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நட்ராஜ் மகன் ஆறுமுகம் (54). இவர் சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் ராமலிங்கம் (60) என்பவருடன் சிறுவானூர் சிவன் கோவில் அருகே சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மணி மகன் சம்பத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சிறுமிகளை ஏற்றிக்கொண்டு திருவெண்ணெய்நல்லூரில் இருந்து ஏனாதிமங்கலம் செல்லும்போது சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்ட இவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், சம்பத்குமார், யாழினி தியாஸ்ரீ, ருத்ரஸ்ரீ, ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், பண்ருட்டி தாலுகா கருகை கிராமத்தை சேர்ந்த தீபிகா, பிரியங்கா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அழகிரி விசாரணை நடத்தி வருகிறார்.


