ஈரோடு, டிச. 20 –
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கிளை தலைவர் சுமதி தலைமையில் நடந்தது. வரவேற்பு குழு செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். கோவை மண்டல பயிற்சி இணை இயக்குநர் அமலா ரெக்சிலின் சிறப்புரை ஆற்றினார். மாநில தலைவர் அம்சராஜ் மாவட்ட செயலாளர் விஜய் மனோகரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். இறுதியில் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அனைத்து தொழிற்பயிற்சி நிலைய மகளிர் பயிற்சியாளர்கள் பயன்பெறும் வகையில் ஈரோடு மற்றும் பல்வேறு இடங்களில் உணவுடன் கூடிய விடுதி மகளிருக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்கள் இயந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்களை கையாளுவதால் ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் பயிற்சிக்கு வந்து பயணங்களின் போது ஏற்படும் அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு திட்டம் வழங்க வேண்டும்.
கல்வித்துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல ஐடிஐ பயிற்சி பெறும் ஏழை பயிற்சியாளர்கள் பயன்பெறும் வகையில் மதிய உணவு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2003ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட தமிழக அரசை கேட்டுக் கொள்வது.
மேற்கண்ட தீர்மானங்கள் உட்பட 26 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற ஜனவரி மாதம் 21 ம் தேதி அனைத்து கிளைகள் முன்பும் உணவு இடைவெளியின் போது ஆர்ப்பாட்டம் நடத்துவது, பிப்ரவரி மாதம் 14 ம் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் நடத்துவது, ஜனவரி 6 ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள கலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில தலைவர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.



