தூத்துக்குடி, மார்ச் 17 –
கடந்த 2020ம் ஆண்டு ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழழகன் (61/26) என்பவரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று தமிழழகன் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 5,000/- அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரூபாய் 5,000/- அபராதம் விதித்தும் மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அஜுகுமார் , இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் , வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அஜித் ரெக்ஸ்டன் ஆகியோர் களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.



