கருங்கல், நவ. 14 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் சிகிட்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இது போன்று சேனம்விளை அரசு மருத்துவமனையும் உள்ளது. இந்த மருத்துவமனைகளில் தினசரி 15 முதல் 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிட்சை பெறுகின்றனர்.
இரண்டு மருத்துவமனைகளிலும் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள் நோயாளிகளாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்கு அரசு சார்பில் அரிசி வழங்கப்படவில்லை.
இதனையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ ஏழை நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்காக மானிய விலையில் மொத்த அனுமதியின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு மறு பரிசீலனை செய்து உணவு பொருட்கள் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தார்.
இதனடிப்படையில் தற்போது கருங்கல் அரசு மருத்துவமனை மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவ மனைகளிலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் நலன் கருதி அவர்களுக்கு தொடர்ந்து மதிய உணவு வழங்க வசதியாக மாதம் தோறும் தேவையான அரிசி, பருப்பு, பாமாயில் வழங்க தமிழ்நாடு மாநில உணவுத் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மதிய உணவு வழங்க அரிசி, பருப்பு, பாமாயில் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீட்டுள்ளார். இந்த தகவலை ராஜேஷ்குமார் எம் எல் ஏ தெரிவித்தார்



