திருப்பூர், டிச. 02 –
காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டம், திருப்பூர் உள்பட ஒரு சில மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை பார் உரிமையாளர்கள் வரவேற்றாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், பல்வேறு குளறுபடி நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பார் உரிமையாளர்கள், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர், மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் டாஸ்மாக் மதுக்கூட உரிமம் பெற்று தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலிபாட்டில்களை சேகரித்துக் கொள்ளும் உரிமம் பெற்று வருகிறோம்.
தற்போது எங்கள் கடையில் சேகரமாகும் பாட்டில்களை தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருப்பதாகக் கூறி எங்களுக்கு வரும். காலிபாட்டில்களை தடுத்து, எடுத்து செல்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு உரிமம் இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், எங்களது வியாபார நஷ்டத்தை சரிசெய்து, சுமூகமான வியாபாரம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நீதிமன்ற உத்தரவின்படி காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரம் காலி பாட்டில்களால் ஏற்படும் நஷ்டத்தை மட்டும் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பார் உரிமையாளர்களும் கோரிக்கை மனு அளித்தனர்.



