தென்காசி, நவ. 26 –
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ மாணவிகள் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ் தலைமையில் உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டனர். உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டி நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 2024 மற்றும் 25 ஆண்டிற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மூன்று கட்டமாக வயது அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 21 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் 8 பேர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். வர்ஷா, மாதவ், ஸ்ரீதரன், பவின் குமார், இஸ்வின் ராஜ் விஜய்பிரதியூஸ், பிரணவ், ரக்சன்சோனியா உள்ளிட்ட மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் தொடர்வண்டி மூலம் தென்காசி தொடர்வண்டி நிலையத்திற்கு வந்தனர். அவர்களை பாராட்டும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் வாத்தியங்கள் முழங்க பெற்றோர், ஊர் பொதுமக்கள் என பலர் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவ மாணவிகள் பதக்கங்களை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்யராஜை கௌரவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர்.



