சென்னை, அக்டோபர் 31 –
சென்னை காவேரி மருத்துவமனையில் 4½ மணி பக்கவாத மீட்சித் திட்டம் பற்றிய வெற்றியை பகிர்ந்து கொள்ளும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் கே. விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2025 உலக பக்கவாத தினத்தையொட்டி நடத்தப்பட்ட நிகழ்வின்போது தனது 4 ½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் வழங்கியிருக்கும் நம்பிக்கை தரும் விளைவுகளை இம்மருத்துவமனை பகிர்ந்து கொண்டது.
இந்நிகழ்வில் வடபழனி, காவேரி மருத்துவமனையின் இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். பெரியகருப்பன் பேசுகையில்: கடந்த இரண்டு ஆண்டுகளில், காவேரி மருத்துவமனையின் பக்கவாத சிகிச்சைக் குழுக்கள், சென்னையில் 956 பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இவர்களுள், 120 மேற்பட்ட நோயாளிகள் முதல் அறிகுறி தோன்றியதிலிருந்து 4 ½ மணி நேரங்களுக்குள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். இவர்களுள் 82 மேற்பட்ட நபர்களுக்கு பக்கவாதத்திலிருந்து முழுமையான மீட்சி கிடைத்திருக்கிறது.
“பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படும் போது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது. கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும், மூளையிலுள்ள ஆயிரக்கணக்கான செல்கள் இழக்கப்படுகின்றன. ஆனால், நோயாளிகள் மிக விரைவாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிற போது அவர்களது உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பேசவும், நடமாடவும் மற்றும் சுதந்திரமாக வாழவும், அவர்களது அவசியமான திறனை சேதமின்றி பாதுகாத்து எங்களால் காப்பாற்ற முடியும். இத்தகைய பெரிய பாதிப்பு நிகழ்விற்குப் பிறகு, மருத்துவமனையிலிருந்து முழுமையான மீட்சி பெற்று, இத்தகைய நோயாளிகள் நலமுடன் நடந்து செல்வதை பார்ப்பதே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கிறது” என்று கூறினார்.
ரேடியல் சாலை, காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சியல் (நரம்பியல்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஜி. சதீஷ் இது குறித்து கூறியதாவது: கடந்த பத்து ஆண்டுகளில், பக்கவாதத்திற்கான சிகிச்சையில் புரட்சிகரமான பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சிரை ஊடாக செலுத்தப்படும் “இரத்த உறைவுக் கட்டியை உடைக்கும் மருந்துகள் (க்ளாட் பஸ்டர்) மற்றும் இயந்திர வழி இரத்தக்கட்டி நீக்கம் என்பவை நவீன சிகிச்சை உத்திகளுள் சிலவாகும்.
சென்னை மாநகரில், ஆழ்வார்பேட்டை, வடபழனி மற்றும் ரேடியல் சாலை ஆகிய அமைவிடங்களில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையின் பக்கவாத மீட்பு சிகிச்சைப் பிரிவுகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. மிக நவீன இமேஜிங் சாதனங்கள், இடையீட்டு சிகிச்சை செயல்முறைகளுக்கான அறைகள் மற்றும் தீவிர பக்கவாத சிகிச்சை மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணர்கள் குழு ஆகியவை ஒருங்கிணைந்து, சிறப்பான சிகிச்சை விளைவுகளை சாத்தியமாக்குகின்றன என்றார்.



