தென்காசி, செப். 9 -தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட குலசேகரப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட 2-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் துரை – செல்வி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள். இருவரும் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு இராணுவ வீரர்களின் தாய் தந்தையான துரை – செல்வி இருவரும் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் குலசேகரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு கீழத்தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவுநீர் செல்லும் வகையில் வாறுகால் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவு நீர் வாறுகாலுக்கு குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர் செல்ல முடியாத வகையில் சிலர் தடுப்புகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் வாறுகாலில் செல்ல முடியாமல் தெருவின் மத்தியில் செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் பொது மக்களும் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.
வாறுகால் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி சென்ற சில மணி நேரத்தில் மீண்டும் அதே இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த சுதா என்பவர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இராணுவத்தில் பணிபுரியும் எனது மகன்கள் ஊருக்கு வந்தால் மகள்களை பொய் புகார் அளித்து போக்சோவில் சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டி வருவதால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் எங்கள் தெருவில் உள்ள வாறுகால் ஆக்கிரமிப்பை முறையான அதிகாரிகளை வைத்து அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் புகார் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து யூனியன் அதிகாரிகளுக்கு வாறுகால் ஆக்கிரமிப்பை முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.



