நாகர்கோவில், செப்டம்பர் 6 –
அரசு பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக விண்ணப்பித்தல் காலவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: முதற்கட்டமாக நூறாண்டு கடந்த பள்ளிகள் உட்பட 8209 பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களை அப்பள்ளியின் தூதுவர்களாக “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” இணையதள பக்கத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் வாயிலாக ஆகஸ்ட் 31 வரை 3999 பள்ளிகளில் 9664 முன்னாள் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட 8209 பள்ளிகளிலும் முன்னாள் மாணவர்கள் பள்ளி தூதுவர்களாக செப்டம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு அளிக்கப்படுகிறது. பள்ளி தூதுவரை நியமிக்க தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு பள்ளிக்கு 5 முன்னாள் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்ட 8209 பள்ளிகளில் விண்ணப்பித்த முன்னாள் மாணவர்களை பள்ளி தூதுவராக தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


