மதுரை, ஆக.27.
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 28 வயதான பெண், சுமார் ஓராண்டாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், முதுகுத்தண்டுவட காசநோய் காரணமாக நடப்பதில் சிரமம் மற்றும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை குறைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றி, நோயாளியின் சொந்த எலும்புகளைப் பயன்படுத்தி முதுகுத்தண்டை நிலைநிறுத்தும் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். கருவில் இருந்த குழந்தைக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கைகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு தாயும், குழந்தையும் நலமாக இருப்பதுடன், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தது கூடுதல் சிறப்பாகும். இதுகுறித்து மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் செல்வமுத்துக் குமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவருடன் முதுநிலை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், இணை நிபுணர் மருத்துவர் கவீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.



