தஞ்சாவூர், மே 15 –
2024 – 2025 ஆண்டில் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்ததை அடுத்து விவசாயிகளுக்கு ரூபாய் 31.81 கோடி நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2026-27 ஆண்டு 52,956 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 40ஆயிரத்து 708 விவசாயிகள் உள்ளனர். இன்னும் விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்களுடைய நிலத்தின் கணினி சிட்டா, ஆதர் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையம் அல்லது அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024 -25 ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட 455 ஏக்கர் பரப்பிற்கு ரூபாய் 28 லட்சம் நிவாரணத் தொகையும், செப்டம்பர் மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 2,996 ஏக்கர் பரப்பிற்கு ரூபாய் 157 லட்சம் நிவாரண தொகையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 2,325 ஏக்கர் பரப்பிற்கு ரூபாய் 160 லட்சம் நிவாரணத் தொகையும் அரசால் விடுவிக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024-25 ஆம் ஆண்டு வடக்கிழக்கு பருவமழை மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 29,620 ஏக்கர் பரப்பிற்கு ரூபாய் 20 கோடியே 40 லட்சம் நிவாரணத்திற்கு அரசாணை பெறப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது அக்டோபர் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருமழையால் 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்புக்குள்ளான பரப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு 9,833 ஏக்கர் பரப்பிற்கு ரூபாய் 7 கோடியே 96 லட்சம் நிவாரணத்திற்கு அரசு அணை பெறப்பட்டு விவசாயிகளில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு 655 நேரடி நெல் கொள்முதல் நிலைகள் திறக்கப்பட்டு 6,21,796 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 893 விவசாயிகளுக்கு ரூபாய் 1,571 கோடி மின்னணு வங்கி பண பரிவர்த்தனை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வன அலுவலர் கார்த்திகேயினி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குனர் வித்யா மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



