திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 10 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றது. அலுவலகத்திற்கு அன்றாட அலுவலகப் பணிகள் சம்பந்தமாக விவசாயிகள், பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெறுதல், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிடுதல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தால் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பகுதிகளில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம், பி.டி.ஒ., அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வங்கி ஆகியவற்றில் அன்றாடம் நடைபெற்று வந்த பட்டா மாற்றம், நில அளவைகள், வங்கி சேவைகள் உள்ளிட்ட அலுவலக தொடர்பான பணிகள் முற்றிலும் முடங்கி போயின. இதனால் அலுவலக பணிகள் தொடர்பாக அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.