நாகர்கோவில், நவம்பர் 29 –
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் 117வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் மணிமேடையில் உள்ள கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் சிலைக்கு கலைவாணர் நற்பணி மன்றம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் பேரன்கள் கிருஷ்ணசந்திரன், கிருஷ்ணன், ராஜன் ஆகியோர் தலைமை வைத்தனர். நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கலைவாணர் நற்பணி மன்றம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
இதில் சென்னை வாணி மகாலில் அமைந்துள்ள கலைவாணரின் திரு உருவ சிலையை அங்கிருந்து மாற்றி சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் வைக்கும் பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


