ஈரோடு, செப். 30
இந்திய அரசின் அலிம்கோ நிறுவனம் மூலம் ஏடிஐபி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 115 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24,47,703 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈ. பிரகாஷ் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார். நடுத்தர அளவு ஊன்றுகோல், மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், சிலிக்கான் குஷன், நான்கு கால் ஊன்றுகோல், நடை உதவிக்கருவி, சக்கர நாற்காலி, கழிப்பறை வசதியுடன் கூடிய சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும், முழங்கை ஊன்றுகோல், சுகம்யா ஊன்றுகோல், நடைதடி, கற்றல் உதவி உபகரணப் பெட்டி, உயரத்தைச் சரிசெய்யக்கூடிய நடைதடி, காது கேட்கும் கருவி, செயற்கை கை, கால் மற்றும் உடல் ஆதரவு உபகரணங்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சங்கர்கணேஷ், உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பயிற்சி) பிரசாந்த், அலிம்கோ இளநிலை மேலாளர் தரிஷப் மெஹ்ரோத்ரா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



