விழுப்புரம், செப்டம்பர் 08 –
விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் பயின்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது இடஒதுக்கீடு தொடர்பாக தவறுதலான பதிவினால் கல்லூரியில் பயில முடியவில்லை என கூறி பாதிக்கபட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த நிலையில் மாணவி அளித்த மனுவுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாணவி சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள அத்தியூர் திருக்கை கிராமத்தை சார்ந்தவர் வினிதா. இவர் இந்த வருட கல்வியாண்டில் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று பொதுதேர்வில் அப்பள்ளியில் 600 க்கு 521 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் வந்துள்ளார். இதனை தொடர்ந்து பொறியியல் படிப்பு படிக்க ஆசைப்பட்டு கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்து முதல் கலந்தாய்வில் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் தாய் தந்தை வயதின் காரணமாகவும் அவர்கள் வெளி ஊரில் இருப்பதன் காரணமாகவும் அந்த கல்லூரியை விட்டு விட்டு தங்கும் வசதியுடன் கூடிய கல்லூரிக்கு எதிர்பார்த்து இரண்டாம் கலந்தாய்வுக்காக விண்ணப்பிக்க இணையதள மையம் சென்று அரசு பள்ளியில் ஒன்றும் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க கூறியுள்ளார். ஆனால் இணையதள மையத்தில் பதிந்த நபர் தவறுதலாக பொதுவகுப்பில் விண்ணப்பித்துள்ளார்.
அதன்காரணமாக சேலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து பணம் கட்டி படிக்கும் நிலைக்கு ஆளாகி கல்வி கடன் 30,000 ஆயிரம் பெற்று கல்லூரியில் கட்டி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் தொடர்ந்து கல்விக்கடன் பெற்று படிக்க வைக்க முடியாது என கூறி கல்லூரியை விட்டு நிறுத்தி உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மாணவி அரசு பள்ளியில் படித்த மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான அரசு 7.5 % இடஒதுக்கீட்டில் விடுதியுடன் கூடிய கல்லூரியில் இடம் பெற்று தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவினை கடந்த வாரம் அளித்த நிலையில் அம்மனுவிற்கு மாவட்ட ஆட்சியர் மின்னல் வேகத்தில் தீர்வு காணப்பட்டு மாணவிக்கு கல்லூரியில் இலவசமாக பயில்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அவர்களை சந்தித்து மாணவி சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மாணவியின் மனுவின் மீது மின்னல் வேகத்தில் ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



