நாகர்கோவில், மார்ச் 30 –
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று குமரி மாவட்டம் வருகை தந்தார். அவர் ஆரல்வாய்மொழியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசியதாவது: குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வேளாண்மை, அடுத்தது மீன்பிடித் தொழில், பிறகு ரப்பர் தோட்டம். இந்த மூன்றும்தான் மையமாக வைத்து இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். விவசாயத் தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசாக அதிமுக அரசு திகழ்ந்து வருகிறது.
அடுத்து மீன்பிடித் தொழில். அது சாதாரண தொழில் அல்ல. அந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் கடலில், ஆழ்கடலில் மீன்பிடித்து வீடு திரும்பினால்தான் அவர் நிச்சயம். அப்படிப்பட்ட ஆபத்தான மீன்பிடித் தொழில் ஈடுபட்டிருக்கின்ற மீனவர் நண்பர்கள், அவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிருக்கிறோம். மேலும், பல்வேறு திட்டங்கள் அதிமுக தேர்தல் அறிவிப்பிலே வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல ரப்பர். இந்த பகுதியிலே ரப்பர் தோட்டம் அதிகமாக இருக்கின்றது. அதன் மூலமாக விவசாயப் பெருங்குடி மக்கள் அதைப் பயிரிட்டு இன்றைக்கு அதிலே வாழ்வாதாரம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத் தொழிலும் சிறக்க அதிமுக ஆட்சி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.
இன்றைய தினம் அதிமுகவின் சார்பாக நம்முடைய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக தலைமையிலே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியிலே தளவாய் சுந்தரம் நிறுத்தப்பட்டிருக்கின்றார். அவருக்கு ‘இரட்டை இலை’ சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக எங்களுடைய கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலே போட்டியிடுகின்ற வேட்பாளர் டாக்டர் ஜே. நிவின் சைமன்க்கு ‘தாமரை’ சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக போட்டியிடுகின்ற நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி, குளச்சல் சட்டமன்றத் தொகுதி, பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி – இந்த நான்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற அந்த பாஜ கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ‘தாமரை’ சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த மாவட்டம் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். அதிமுக அரசு இருந்தபொழுது இரண்டு இடங்களிலே நாங்கள் அரசு கலை கல்லூரியைக் கொடுத்தோம். நாகர்கோவிலில் ஒன்று, பால்குளத்தில் ஒன்று – இரண்டு இடத்தில் இன்றைக்கு அரசு கலைக் கல்லூரியைக் கொடுத்து ஏழை எளிய ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கடைக்கோடியில் இருக்கின்ற மாணவ மாணவியர் குறைந்த கட்டணத்திலே உயர்கல்வி படிப்பதற்காக அதிமுக ஆட்சியில் இரண்டு கல்லூரி கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்
இந்தியாவிலேயே யாரும் கொண்டுவராத அற்புதமான திட்டத்தை ஜெயலலிதா இருக்கின்ற பொழுது அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தோம். ஆனால் திமுக அரசு வந்ததும் நிறுத்தப்பட்டது. இன்றைக்கு மக்களின் செல்வாக்கு இழந்த காரணத்தினால் அவசர அவசரமாகக் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாகத் தருவேன் என்று சொல்லி அவசர அவசரமாகக் கொடுத்திருக்கிறார்கள். அந்த லேப்டாப் தரமற்ற லேப்டாப் ஆக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அதிமுக ஆட்சிக்கு வருகின்ற பொழுது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இதில் ஊழல் நடைபெற்றிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவிலேயே அதிகமான தேசிய விருதுகள் பெற்ற ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டில் பல துறைகளில் சாதனை படைத்தோம். உள்ளாட்சித் துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறோம்.
இன்றைய அரசு கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் மூன்றும் தெளிவாகச் செய்றாங்க. இந்த ஐந்து ஆண்டு காலம் செய்த சாதனைனா இதுதான் சாதனை. இன்றைக்கு ஸ்டாலின் எப்படியாவது உதயநிதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்பதற்குத்தான் பாடுபட்டுட்டு இருக்கார். இந்த தேர்தல் முடிந்த பிறகு 100 சதவீதம் திமுக வெற்றி பெறுவது இல்லை. அது கனவில் கூட நடக்காது. அப்படி அவர் வெற்றி பெற்று வருவார் என்று நினைச்சா ஸ்டாலின் முதலமைச்சர் இல்லை, உதயநிதி முதலமைச்சர் ஆவதற்குத்தான் திட்டம் போடுறாங்க. ஸ்டாலினே உங்கள் கனவு பலிக்காது, பகல் கனவாத்தான் இருக்கும்.
இது என்ன அரச பரம்பரையா? கருணாநிதி, ஸ்டாலின் பிறகு உதயநிதி. அரச பரம்பரையில் தான் அதுக்குப் பிறகு இளவரசர் வந்துட்டு இருப்பாங்க. அப்படி அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல், நடைபெறுகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல். இனி தமிழகத்தை ஆளக்கூடியவர் இங்கிருக்கின்ற சாதாரண மக்களில் ஒருவராகத்தான் இந்த நாட்டை ஆள வேண்டும். அப்பொழுதுதான் நாட்டு மக்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். மக்கள் படுகின்ற துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் அத்தனையும் புரிந்து அதைச் சாதிக்கக்கூடிய ஒருவர்தான் நாட்டுடைய முதலமைச்சராக வேண்டும்.
5 வருஷத்துல 5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்காங்க. அஞ்சு வருஷத்துல 5 லட்சம் கோடி. சரி கடன் வாங்குனீங்க என்ன திட்டத்தைக் கொண்டு வந்தீங்க? கொண்டு வந்தாங்களா? எந்த ஒரு புதிய திட்டமும் இல்ல. இன்றைக்குத் தமிழ்நாடு தாழ்ந்து தலை குனிந்து போய் காட்சியளிக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தக் கடன் பூரா மக்கள் தலையில்தான் வந்து விழும். இப்படி கடன் வாங்குகின்ற அரசாங்கம் தொடர வேண்டுமா? நாட்டு மக்கள் மீது வரி சுமத்துகின்ற அரசாங்கம் தொடர வேண்டுமா? சிந்தியுங்கள். தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
இன்றைக்குச் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பாட்டிமார்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை. அப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா?
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட்டுக்கு விதிவிலக்கு பெறப்படும் என்று. இதுவரைக்கும் விதிவிலக்கே பெற முடியல. உதயநிதி ஸ்டாலின் சொன்னாரு, நீட் விதிவிலக்கு பெறுவதற்கு ரகசியம் இருப்பதாகச் சொன்னார். ரகசியத்தைச் சொல்லிட்டாரு முதலமைச்சர் சட்டமன்றத்துல, நீட்டுக்கு விதிவிலக்கு பெற முடியாது. இதைத்தாங்க நாங்களும் சொன்னோம் 2021-ல். பெற்றோர்களையும் மாணவர்களையும் நம்ப வைத்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து அந்தர்ப்பல்ட்டி அடித்தது திமுக அரசாங்கம்.
இப்போது கேட்டால் உச்சநீதிமன்றத்துல தீர்ப்பு வந்த காரணத்தினால அதை நடைமுறைப்படுத்தாது என்று சட்டமன்றத்தில் தெரிவிக்கிறாங்க. ஆகவே இந்தத் தேர்தலிலே நீங்கள் எங்களுடைய கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்! ஸ்டாலின் அரசு பெயிலியர் மாடல் அரசு பை-பை ஸ்டாலின் . இவ்வாறு அவர் பேசினார்.



