கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 1 –
கிருஷ்ணகிரி நகராட்சி, ஜக்கப்பன் நகர், 18 வார்டு, முதல் குறுக்கு தெரு பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027- வீடுவீடாக கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் ஒரு பகுதியாக வீடுவீடாக கணக்கெடுக்கும் (House Listing Operations) பணி துவக்கப்பட்டுள்ளது. இப்பணி 01.08.2026 முதல் 30.08.2026 வரை மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. இப்பணிக்காக மாவட்டம் முழுவதும் 2,660 கணக்கெடுப்பாளர்கள் (Enumerators) மற்றும் 418 மேற்பார்வையாளர்கள் (Supervisors) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்
கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களும் அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் வருகை தருவார்கள். பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டையை உறுதிப்படுத்திக் கொண்டு, தேவையான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கணக்கெடுப்பின்போது பெறப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு, கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை வெற்றிகரமாக நடத்த உதவுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட புள்ளியியல் அலுவலர் குப்புசாமி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சேகர், தனி வட்டாட்சியர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் ராஜலட்சுமி, நகரமைப்பு அலுவலர் மலர்விழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.



