திண்டுக்கல், செப்.12:
இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB), தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. நவீன டிஜிட்டல் யுகத்தில் செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், செயற்கை நுண்ணறிவு (AI), உண்மை சரிபார்ப்பு (Fact-checking) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் யாஷ் கிராண்டே ஹோட்டலில் நடைபெற்ற பயிலரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ஜெயபாரதி தொடங்கி வைத்தார். PIB சென்னை இயக்குநர் பி.அருண்குமார் வரவேற்றார். நவீன இதழியலின் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து பேசிய தென் மண்டல தலைமை இயக்குனர் வி.பழனிசாமி, அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் பத்திரிகையாளர்கள், அரசு நலத்திட்டங்களை முழுமையாக அறிந்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
மேலும், உண்மைச் செய்திகளை விட போலிச் செய்திகள் வேகமாகப் பரவும் சூழலில், செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் திறனை பத்திரிகையாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் செய்தியாளர்களின் திறன் மேலும் மேம்படும் என்றும் தெரிவித்தார். சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பத்திரிகையாளர்கள் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பத்திரிகையாளர் நலத் திட்டத்தின் கீழ் விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. கோழிக்கோடு பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஹபீப் ரஹ்மான் ‘உண்மை சரிபார்ப்பு’ குறித்து பயிற்சி அளித்தார். தோட்டக்கலைத் திட்டங்கள் குறித்து துணை இயக்குநர் பி.காயத்ரியும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பாரத இயக்கம் குறித்து காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பொறியாளர் ரூசோ காளையும் விளக்கினர்.
இம்முகாமில் மூத்த மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள், இதழியல் மற்றும் காட்சித் தொடர்பியல் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நிபுணர்களுடன் கலந்துரையாடினர். முடிவில் மத்திய தகவல் தொடர்பு பணியகத்தின் கள விளம்பர உதவியாளர் பி.வேல்முருகன் நன்றி கூறினார்.



