ஈரோடு, ஜூலை 13 –
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டு வரிசையில் நின்று மனுக்களை கொடுத்தனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கைத்தறி, துணிநூல் காதித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதன் பிறகு அமைச்சர்கள் கூறும் போது: பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து விரைந்து தீர்வு காண முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவும் ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டு உரிய துறைகளுக்கு அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை செல்ல வேண்டிய நிலையை மாற்றி, அரசு நேரடியாக மக்களை அணுகி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் சிப்காட் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், குடிநீர் வசதி, சமூக நலத் திட்டங்கள். அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு விரைவாக தீர்வு காணப்படும் என்று கூறினர்.
இந்த முகாமில் 1000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா சங்கர், வருவாய் வட்டாட்சியர் செல்வகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



