தேனி | செப். 17:
தேனி மாவட்டம் பெரியகுளம் அண்ணா நகர் எனப்படும் ஆர்எம்டிசி காலனி பகுதியில் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தந்தை பெரியார் 148-வது பிறந்தநாள் மற்றும் பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. தொடர்ந்து 17-வது ஆண்டாக இவ்விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக ஆர்வலரும், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளருமான மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பகுத்தறிவாளர் கழக பொருளாளர் ஜெயராஜ் வரவேற்புரை மற்றும் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் விஜயராமன், அப்பாஸ், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சீனிவாசன், ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பெத்தனசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பெரியகுளம் வளர்ச்சி பேரவை தலைவர் வழக்கறிஞர் மணிகார்த்திக் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும், அனிஃபா பிரியாணி உரிமையாளர் மற்றும் இளம் தொழிலதிபர் பாசித் ரகுமான் சார்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது.
சிலம்பு பயிற்சி ஆசிரியர் தங்கப்பாண்டியன் தலைமையில் மாணவர்கள் சிலம்பாட்டக் கலையை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் கே.எம். கண்ணன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், நந்தகுமார், மணி பூசாரி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகமது ஷமீல் நன்றி கூறினார்.



