நாகர்கோவில், 18.08.2026
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் தற்காப்பு பயிற்சி பெற்ற மாணவியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப். சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் தெரிவிக்கையில்:-
சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் திங்கள்நகர் மற்றும் பூதப்பாண்டி ஆகிய பகுதிகளில் செயல்படும் சமூக நல விடுதிகளில் பயனடைந்து வரும் 50 பெண் குழந்தைகளுக்கு 45 நாட்களுக்கு மாலை வேளையில் (90 நிமிடங்கள்) பெண் பயிற்றுநரை கொண்டு சிலம்ப பயிற்சி வழங்கப்பட்டது.
சிலம்ப பயிற்சி பெற்ற மாணவிகளின் செயல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தற்போதைய காலகட்டத்தில் தற்காப்புக் கலைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களின் சுய பாதுகாப்புக்கும், உடலுறுதிக்கும் சிலம்பம் போன்ற பாரம்பரியத் தற்காப்புக் கலைகளைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் காயத்ரி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சாரதா, பள்ளி துணை அலுவலர் பென்னட், எஸ்.எல்.பி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெய்வபிரியா, மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மைய ஒருங்கிணைப்பாளர் எவர்லின் சுபா, மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



