சென்னை, ஜூலை 10 –
தென்னிந்தியாவில் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சிறுநீர் அடங்காமை அமைதியாகப் பாதிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு அல்லது முதியோர் பிரச்சினையாக கருதப்பட்ட சிறுநீர் அடங்காமை தற்போது 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த நோயின் பரவல் 2025-ம் ஆண்டுக்குள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை சேர்ந்த எம்.சி.எச் சிறுநீரக மருத்துவர் டாக்டர் நிதேஷ் ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: குறிப்பாக 25 வயதுக்கு மேல் பெண்களுக்கு உடல் நிறை குறியீட்டு எண் அதிகரிக்கிறது. அதாவது உடல் பருமன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக தன்னிச்சையாக சிறுநீர் கசிவுக்கு வழி வகுக்கிறது. இது உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும் இது வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கிறது.
தற்போது 10-20% சிறுநீர் அடங்காமை தொற்றை உடலியல், ஹார்மோன் மற்றும் மகப்பேறியல் காரணிகளால் பெண்கள் அனுபவிக்கின்றனர். நகரமயமாக்கல் மற்றும் உடல் பருமன் இரண்டும் அதிகரித்து வரும் தென் மாநிலங்களில் நிலைமை குறிப்பாக கவலைக்குரியதாக மாறி வருகிறது.
இது ஒரு சிறுநீர்ப்பை பிரச்சனை மட்டுமல்ல. இது பல பெண்களுக்கு மன ஆரோக்கியம், கண்ணியம் மற்றும் வாழ்க்கைத் தரம் தொடர்பான பிரச்சினை ஆகும். சயின்ஸ் டைரக்ட் மற்றும் எம்ஜேஎம்ஆரில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையில் சிறுநீர் கசிவு பிரச்சினையால் சங்கடம் மற்றும் பயம் காரணமாக பல பெண்கள் வெளியில் சொல்ல தயங்குவதுடன் பயணங்கள், சமூக நிகழ்ச்சிகள், வேலை போன்றவற்றை தவிர்க்க செய்கிறார்கள்.
சிறுநீர்ப்பை ஆரோக்கியம், பராமரிப்பு குறித்து பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குதல், முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், யோகா, உடற்பயிற்சி செய்தல் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுதல், அதற்கான கல்வியை ஊக்குவித்தல் போன்ற விழிப்புணர்வின் மூலம் இந்த குறைபாடுகளை குணமாக்கலாம் என்றார்.