புதுக்கடை, மார்ச் 3 –
புதுக்கடை அருகே உள்ள ராமன் துறை பகுதியை சேர்ந்தவர் சிபின் நோயல் (36). மீனவரான இவருக்கு அகிலா பானு என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். சிபின் நோயல் குழித்துறை பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிபின் நோயல் இரவு உணவு பின் படுக்கை அறைக்கு தூங்க சென்றார். அடுத்த நாள் காலையில் அவர் படுக்கை அறையில் அவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் சிபின் நோயல் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிபின் நோயலின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


