தருமபுரி, ஜனவரி 21 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரம் பள்ளிக்கூடத்தான் தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலக்கோடு மேற்கு தெருவில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் இன்னிசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்பொழுது வாழைத்தோட்டம் ஊர் மக்களுக்கும், பாலக்கோடு மேல் தெரு மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் மேல் தெருவை சேர்ந்த மக்களுக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு நபர் கோமா ஸ்டேஜ் அளவிற்கு செல்லும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த தகராறு சம்பந்தமாக பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் காவல் துறையினர் தலையிட்டு சமாதானம் செய்த பின்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த அனைவரும் அந்தந்த பகுதிக்கு சென்று விட்டனர்.
மீண்டும் இரவு 10:30 மணி அளவில் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 150 – க்கும் மேற்பட்டோர் மேல் தெருவிற்கு வந்து பொதுமக்களையும், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் அனைத்து வாகனங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர். எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாங்களே இந்த தகராறு சம்பந்தமாக தீர விசாரித்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சமூக ஆர்வலர் சிவா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



