திங்கள்சந்தை, பிப். 7 –
வில்லுக்குறி, திருவிடைக்கோட்டில் அமைந்துள்ள மகாதேவர் கோயில் 12 சிவாலயங்களில் 9-வது தலமாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயம் சிவபெருமான் சடையப்பர் வடிவில் அருளும் இடமாகவும், மூலவர் சிவலிங்கம் இயற்கை பாறையில் உருவானது என்றும் கருதப்படுகிறது. இத்தல சிவபெருமான் ‘சடையப்பர்’ (முடி சூடிய இறைவன்) என்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் வளாகத்தில் ஆல், அரசு, வேம்பு ஆகியவை ஒரே மரமாக இணைந்து காட்சி தருகின்றன. அருகே விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் உள்ளன. ஆய் அரசர்களின் காலத்தில் சிறந்து விளங்கியது. பிற்காலத்தில் வேணாட்டு அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கு சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை மகா சிவராத்திரி விழா புகழ் மிக்கதாகும். சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும். பக்தர்கள் 12 சிவாலயங்களுக்கும் சென்று வழிபடுவர். 9-வது சிவாலயமான வில்லுக்குறி திருவிடைக்கோடு சடையப்பர் மகாதேவர் கோவிலுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்தும் வாகனங்களிலும் கோவிந்தா..! கோபாலா..!! என்ற பக்தி முழக்கத்துடன் வருவர். பைக்குகளில் வரும் பக்தர்கள் வில்லுக்குறி பாலத்தில் இருந்து மாம்பழத்துறையாறு அணை சாலை வழியாக அங்குள்ள கிருஷ்ணன் கோவில் வருவர். அங்கு வில்லுக்குறி இரட்டைக்கரை கால்வாயில் புனித நீராடி விட்டு அப்பகுதியில் உள்ள 2 சிறு பாலங்கள் வழியாக மகாதேவர் கோவிலுக்கு செல்வர். இந்த வழக்கம் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.
இந்த 2 பாலங்களும் இரட்டைக்கரை கால்வாய் வந்த பொழுது அமைக்கப்பட்ட சுமார் 100 ஆண்டுகள் பழமையான பாலங்கள் ஆகும். இவை விரிசல்கள் ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் அப்புறப்படுத்தி விட்டு புதிய பலம் கட்ட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு சிவராத்திரியை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பாலங்கள் வழியாக வந்து சென்றனர். அப்போது மதிய வேளையில் பழுதடைந்த பாலம் ஒன்று திடீரென இரண்டாக முறிந்து ஆற்றிற்குள் விழுந்தது. ஆற்றிற்குள் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் நடந்த போது பாலத்தில் நடந்து சென்ற பத்தர்கள் சிலர் காயமடைந்த சம்பவமும் நடந்திருந்தது.
இந்தப் பாலம் உடைந்து ஒரு ஆண்டு ஆகியும் புதிய பாலம் அமைக்க வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மற்றொரு பாலமும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போதுதான் புதிய பாலம் அமைக்க டெண்டர் வைக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் பணி தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. புதிய பாலம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும் சிவராத்திரிக்குள் பணி முடிவது என்பது இயலாத காரியம். வரும் 15ம் தேதி சிவராத்திரி விழா கொண்டாட உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வர். எனவே பக்தர்கள் நலன் கருதி கோவிலுக்கு செல்லவும், வரவும் 2 தற்காலிக பாலங்கள் தனித்தனியாக அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



