திருப்பத்தூர், செப். 19 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்தேர்வு 2025 (SLAS) குறித்த மீளாய்வுக் கூட்டம் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி முன்னிலையில் பொய்யாமொழி நடைபெற்றது.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்தேர்வு-2025 (SLAS) குறித்த மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஒரு தலைமுறையில் பெறுகின்ற கல்வியறிவு என்பது ஏழேழு தலைமுறைக்கு நமக்கு பாதுகாப்பாக அமையும். மாணவச் செல்வங்களுக்கு இக்கல்வியை வழங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
state level achievement survey வந்த பின்னர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் ஒரு குழந்தைகள் கூட சேர்க்கை இல்லாத பள்ளிகள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும், அதிகமான மாணக்கர்கள் சேர்க்கை நடைபெற்ற பள்ளிகள் குறித்தும் இதுபோன்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கேள்வி எழுப்பி அதற்கான அறிக்கை அளிப்பதே இக்கூட்டம் ஆகும். திறனாய்வு தேர்வில் சிறந்த முறையில் செயல்படுகின்ற வட்டாரமாக கந்திலி வட்டாரம் இருக்கிறது. மற்ற வட்டாரங்களில் உள்ள பள்ளிகள் முயற்சி செய்தால் சிறந்த முறையில் செயல்படுகின்ற பள்ளிகளின் பட்டியல்களில் மட்டுமல்லாமல் மாநில அளவில் சிறப்பாக செயல்படுகின்ற பள்ளிகளாக மாற்ற முடியும்.
நான் எனது அலுவலகத்தில் இருந்து கொண்டே மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் மூலமாக ஆய்வுக் கூட்டம் நடத்திட முடியும். இருப்பினும் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்கிற நோக்கத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறேன். நான் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் 32-வது மாவட்டம் திருப்பத்தூர் ஆகும். நான் ஆய்வுசெய்த 31 மாவட்டங்களில் தலைமையாசிரியர்களிடம் இருந்து என்னென்ன கருத்துக்கள் பெறப்பட்டதோ அதே கருத்துக்கள் தான் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிள்ளைகளும் நம்முடைய பிள்ளைகள் என நினைத்து அவர்களுடைய நலன் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கு எளிதில் புரிகின்ற வகையில் பாடங்களை கற்பிக்க வேண்டுமென ஆசிரியர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரை அளவு (quantity) பற்றி பேசி வந்தோம். இப்போது தரத்தை பற்றி பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கின்றோம். புரிதல் தன்மையோடு பாடம் நடத்த வேண்டும். பாடம் எப்படி நடத்துவது என்று மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) அலுவலர்களிடம் தொடர்ந்து உரையாற்றி கொண்டிருக்க வேண்டும். இடைநிற்றலுக்கு என்ன காரணங்கள், மாணவர்கள் சேர்க்கை என்று வரும்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேர்க்கை எவ்வாறு உள்ளது என்றும் அரசாங்கம் கொண்டு வருகின்ற திட்டத்தை முழுமையாக உள்வாங்கி கொண்டு புரிதலோடு நாம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினோமா என்று உறுதி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
தொடக்க நிலை மாணாக்கர்களுக்கு நடனமாடி பாடம் நடத்தினாலும் சரி, ஒரு பொருளைக் காண்பித்து பாடம் நடத்தினாலும் சரி, எம்முறையில் பாடம் நடத்தினாலும் சரி அக்குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்தும் போது அக்குழந்தைகளுக்கு கற்றலில் அடித்தளம் நன்கு வலுவாக இருக்கும். அவர்கள் உயர்படிப்பிற்கு செல்லும்போது கற்றல் திறனில் எவ்வித சிரமும் இருக்காது. ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றவர்கள் ஆசிரியர்கள் தான். மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை கல்வித்திறனை நல்ல முறையில் கற்பித்தோம் என்றால் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயில முடியும், எட்டாம் வகுப்புக்குப் பிறகு மாதிரி பள்ளியில் சேர்த்து நல்ல கல்வி கொடுக்க முடியும். மேலும் வெற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு வார இறுதி வகுப்புகள் என எந்த ஒரு மாணவர்களையும் விட்டு விடாமல், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் சேர வேண்டும் என்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வித் துறையின் அனைத்து விதத்திலும் தரத்தினை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
மேலும், எப்மார்ட் வகுப்பு, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தேவையான அனைத்து தொழிற் நுட்பங்களையும் கொண்டு வந்துள்ளோம். அரசு பள்ளிகளின் உள்ள உள்கட்டமைப்பை பயன்படுத்தி நம் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம். மாண்புமிகு அமைச்சர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட அலுவலர் ஆகியோர் தான் பள்ளியில் திடீர் ஆய்வு செய்திட வேண்டும் என்பது கிடையாது. ஆசிரியர்களாகிய நீங்களே ஆய்வு செய்யலாம். உங்கள் பிள்ளைகளின் கற்றல் திறன் எந்த நிலையில் உள்ளது. அதனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை நீங்களே திட்டமிடலாம்.
நான் பல்வேறு நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் பள்ளி கல்வித் துறை அமைச்சராக கல்வி குறித்து சுற்றுப் பயணம் சென்று உள்ளேன். அங்கெல்லாம் இருப்பதை காட்டிலும் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் நன்றாக உள்ளது. நாம் மாணாக்கர்களுக்கு சொல்லித் தருகின்ற விதத்தை தற்போது மாணாக்கர்களின் புரிதலுக்கேற்றார் போன்றும் தொழில் நுட்பத்திற்கேற்றார் போன்றும் Update செய்து கொள்ள வேண்டும். நான் வரும் ஆண்டில் SLAS கூட்டத்தில் கலந்து கொள்ள வரும்போது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தலைமையாசிரியர்களையும் பாராட்டுவதற்காக வந்ததாக இருக்க வேண்டும். அதற்கேற்றார் போன்று அனைத்து ஆசிரியர்களும் செயல்பட வேண்டும்.
மாணவர்களை பெற்றோர்கள் நம்மிடம் ஒப்படைக்கிறார்கள் அவர்களை சிறப்பான முறையில் கல்வி கற்பித்து நம்முடைய பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே தான். மேலும் நான் அடுத்த மாநில அளவிலான அடைவு தேர்வு மீளாய்வு கூட்டத்திற்கு வரும்பொழுது, பொதுத் தேர்வு மட்டுமல்லாது மாநில அளவிலான அடைவு திறனிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம் என்று தெரிவிக்க வேண்டும். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஆய்வுக் கூட்டத்திற்கு செல்லும் பொழுது திருப்பத்தூர் மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவிக்க வேண்டும். பள்ளிச்சார்ந்த திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தும் போது அத்திட்டங்கள் மாணவர்களிடையே சென்று வெற்றியடைவது ஆசிரியர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக தேர்ச்சி வீதம் கொடுத்து கொண்டிருக்கிறோம் அவை ஒவ்வொரு மாவட்டத்திற்கு அவற்றின் செயல்பாடுகள் சார்ந்துள்ளன. மாவட்டம் மட்டுமின்றி வட்டங்களிலும் அதன் செயல்பாடுகள் வேறுபட்டு அமைக்கின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி தடைபட்டுவிட கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகளை பசியின்றி கல்வி கற்பதற்கு ஊட்டச்சத்தான உணவுகளை முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறார்கள். மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலமாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களை ஊக்குவித்து மாணவர்களின் முன்னேற்ற பாதையில் வழி நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியக்கோட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இராணிப்பேட்டை முதல்வர் (பொ) முனைவர் வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மலைவாசன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



