தஞ்சாவூர், ஜூலை 4 –
பள்ளிகளில் கல்வித் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளனர் என்றார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி. தஞ்சாவூரில் அரசு, அரசுஉதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அடைவு தேர்வு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-25 கல்வி ஆண்டில் அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு தேர்வு நடந்தது. அதாவது 1,374 பள்ளிகளில் 3ம் வகுப்பில் 11,550 மாணவர்களிடமும் 1,379 பள்ளிகளில் 5ம் வகுப்பில் 12,540 மாணவர்களிடமும் 548 பள்ளிகளில் 8ம் வகுப்பில் 10,663 மாணவர்களிடமும் அடைவு தேர்வு நடத்தப்பட்டது.
மாணவர்களின் மொத்த அடைவுத்திறன் 58.41 சதவீதம் ஆகும். பள்ளி கல்வித்துறை சார்பில் தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளின் கற்றல் திறன் மேம்படும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வித் தரம் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு மாதவன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் ஆனந்தராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் அய்யா கண்ணு, மதியழகன் பழனிவேல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
அடைவு திறன் தொடர்பான ஏசர் அறிக்கை மிகவும் ஆபத்தமானது என்றும் அதை யாரும் பின்பற்றக் கூடாது எனவும் யுனெஸ்கோ கூறியுள்ளது. தமிழ்நாடு அளவில் அடைவு திறன் தொடர்பாக 25,000 மாணவர்களை மட்டுமே ஏசர் அமைப்பு மதிப்பீடு செய்தது. ஆனால், பள்ளிக்கல்வித்துறையினர் 9.80 லட்சம் மாணவர்களை மதிப்பீடு செய்தனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் முன்னேற்ற அறிக்கை முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து ஆசிரியர்கள் செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு முன்னேற்றத்தை ஏற்றுவோம் என்றார் அமைச்சர்.