நாகர்கோவில், மே 11 –
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மே மாதம் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் முகாம்கள் உள்ளிட்ட மீனவர் குறைதீர் முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து விதிமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன.
அதன்படி இன்று திங்கள் கிழமை மக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 166 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பத்மபிரியா, ரோஷன்பேகம் (தேர்தல்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் மேஜர்.வி.எஸ்.ஜெயகுமார், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



