நாகர்கோவில், ஜன. 22 –
நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று தொடங்கி இரவு முழுவதும் பணி மேம்பாடு கிடைக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் எனவும், இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், போராட்டத்தில் ஈடுபடும் பேராசிரியர்கள் வகுப்பறையை முடித்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்பதாகவும் தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை இதே நிலையில் தங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மத்திய மூட்டா நான்காம் மண்டல பொருளாளர் முனைவர் இராஜ ஜெய சேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்து கூறியதாவது: கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 அமல்படுத்த கோரி அரசு உதவி பெரும் கல்லூரிகளில் பணியாற்றிடும் பேராசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளை கடந்த பின்பும் பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 கடந்த 11.01.2021 அன்று வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையின்படி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையோடு வழங்கப்பட்டு விட்டது ஆனால் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றிடும் பேராசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளை கடந்த பின்பும் பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்த நிலையில் ஜனவரி மாதம் 20ஆம் தேதி கடந்த பின்பும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடக்கின்ற இக்காலகட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும், முதலமைச்சர் இதில் தலையிட்டு உடனடியாக ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுத்திடக் கோரி கல்லூரிகளில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டமானது நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பேராசிரியர் நான்காம் மண்டல செயலாளர் முனைவர் ம.மகேஷ் தலைமையில் மத்திய மூட்டா பொருளாளர் முனைவர் இராஜ ஜெய சேகர் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மூட்டா மற்றும் ஏ யு டி சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



