நாகர்கோவில், ஜூன் 24 –
நாகர்கோவில் அருகே உள்ள பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் மகன் பென்சிங் ராஜ் (20). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் தாவரவியல் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 22ஆம் தேதி பென்சிங் ராஜ் பிறந்தநாள் ஆகும். அன்றைய தினம் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி பிறந்தநாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்ததும் அவரது தந்தை ராஜ்குமார் கண்டித்து, மகனுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தந்தை மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்து கோபத்துடன் பென்சிங் ராஜ் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் அக்கம் பக்கத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் பெற்றோர் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை பெருந்தலைகாடு ஆற்றின் கரையோரத்தில் பென்சிங் ராஜ் சட்டையும் அதன் அருகில் விஷபாட்டிலும் கிடந்தன. இதை அடுத்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றுக்குள் இறந்த நிலையில் பென்சிங் ராஜ் கடந்தார். உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நண்பர்களுக்கு மது விருந்து அளித்து பிறந்தநாள் கொண்டாடியதை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின் பென்சிங் ராஜ் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் கூறினார்கள்.


