நாகர்கோவில், மே 27 –
குமரி மாவட்டத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலமாக பெருமளவில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் பேரில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் ரயில்களில் போலீசார் தினமும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அசாம் மாநிலம் திப்ருகாரிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வரவேண்டும். ஆனால் இந்த ரயில் பல மணி நேரம் தாமதமாக, இன்று காலை 5 மணி அளவில் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது.
பின்னர் நாகர்கோவில் இருந்து அந்த ரயில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றது. அப்போது ரயிலில், ரயில்வே போலீசார் மற்றும் போதை பொருள் தடுப்பு போலீசார் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்குள்ள ஒரு இருக்கையின் கீழே கேட்பாரற்ற நிலையில் ஒரு பை அனாதையாக கிடந்தது . அங்கிருந்த பயணிகளிடம் விசாரித்த போது அந்த பைக்கு யாரும் உரிமை கோரவில்லை. சந்தேகமடைந்த போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதற்குள் 10 பார்சல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை சோதனை செய்தபோது அவை அனைத்தும் கஞ்சா பார்சல் என்பது உறுதி செய்யப்பட்டது. தலா ஒரு கிலோ எடை கொண்ட 10 கஞ்சா பாக்கெட்டுகள் அதில் இருந்தது. போலீசார் உடனடியாக நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு பார்சல்களை கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூடைகளை மேல் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
கஞ்சாவை கடத்தி வந்த வட மாநிலத்தை சேர்ந்த நபர் ரயில் தாமதமானதால் போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பையை விட்டு, தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் இதுபோன்று அடிக்கடி கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத் தகுந்ததாகும்.



