நாகர்கோவில், செப். 12 –
நாகர்கோவில் மாநகர சாலை ஓரங்களில் பொதுமக்கள் வசதிக்காக நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 23வது வார்டுக்கு உட்பட்ட டதி பள்ளி சந்திப்பு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு வரையுள்ள சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைத்து நடைபாதை அமைக்க ரூபாய் நாற்பது லட்சம் செலவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மாநகராட்சியில் ஒப்பந்த படிவத்தில் உள்ளபடி பணிகள் நடைபெறாமல் ஏற்கனவே இருந்த மழை நீர் வடிகால் மீது மண் நிரப்பி அதைமூடி கான்கிரீட் போடப்பட்டு நடைபாதை பணிகள் நடைபெற்று வருவதால் சிறு மழை பெய்தாலும் மழை நீரானது சாலையில் ஓடும் நிலை உள்ளது.
ஒரு பணியை தொடங்கி வைக்கும் மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் மக்கள் பிரதிநிதி போன்றவர்கள் ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தில் உள்ளபடி பணியை செய்கிறாரா என்பதை பார்வையிடாமலும் பணியின் தரத்தை ஆய்வு செய்வதை விட்டு விடுவதால் பொதுமக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கில் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டாக உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு உயர்த்தப்பட்ட வரியால் மாநகராட்சியின் வருவாய் பல மடங்கு உயர்வை கண்டுள்ளது.
தற்போது மாநகர் பகுதிகளுக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் சாலைப் பணியானது முழு வீச்சில் நடைபெற்று நிறைவு கண்டு வருகிறது. தெருக்களில் சாலை அமைக்கும் போது மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்வதற்கு சாலையின் இரு புறங்களிலும் இருந்த மழைநீர் வடிகால் ஓடைகள் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. இதனால் சிறு மழை பெய்தால் கூட மழை நீர் செல்ல வழி இல்லாமல் மழைநீர் சாலைகளில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அனைவரும் அறிந்தது.
மழைநீர் வடிகால் மீது நடைபாதைகள் அமைக்கும் முன் முறையான திட்டமிடல் அவசியம், திட்டமிடப்படாத நகரமயமாக்கலூக்காக நடைபாதைகள் அமைக்கும் போது, மழைநீர் வடிகாலுக்கு இடையூறு ஏற்படாதவாறு, திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் மேயர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் போன்றவர்கள் பணிகளை தொடங்கிவைத்து விட்டு அதன் பின் அப்ப பணிகளை ஆய்வு செய்வதில்லை.
பணியில் தவறு நடைபெற்றால் வீணடிக்கப்படுவது பொது மக்களின் வரிப்பணம் என்பதினாலோ என்னவோ தொடக்கத்தில் புகைப்படத்தில் இடம் பிடிக்க காட்டும் ஆர்வம் நடைபெறும் பணியை பார்வையிடுவதில் காட்டுவதில்லை. ஆகவே தான் ஒப்பந்த படிவங்களில் உள்ள பணி ஒப்பந்தங்கள் காற்றில் பறக்க விடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



